ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்: பிரதமர் அலுவலகத்தில் புகார்

1 mins read
f45ed010-f757-4a77-abbc-9dcdfb4d2a06
கோப்புப் படம் - ஊடகம்

போபால்: ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த தன் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் இணையம் வழி பிரதமர் அலுவலகத்திலும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் புகார் அளித்துள்ளார்.

குடிபோதையில் பெண் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்தது தெரியவந்துள்ளது.

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு படுக்கை வசதி கொண்ட விரைவு ரயிலில் தனது 7 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் ரயிலின் கீழ் அடுக்கு படுக்கையில் தனது மகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

ரயில் குவாலியர் ரயில் நிலையம் அருகே வந்தபோது மேல் படுக்கையில் இருந்து கீழே தண்ணீர் வழிந்துள்ளது. இதனால் பெண் விழித்துக்கொண்டார். ஒருவித நெடியும் வீசியதை அடுத்து, மேல் அடுக்குப் படுக்கையில் படுத்திருந்த ராணுவ வீரரை பார்த்தபோது அவருடைய உடை நனைந்து இருந்தது. அவர் குடிபோதையில் சிறுநீர் கழித்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனது கணவருக்கு இந்தச் சம்பவம் குறித்து கைப்பேசியில் தெரிவித்தார். அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு இதுதொடர்பாக புகார் அளித்தார். ஆனால், ராணுவ வீரர் மீது அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, இணையம் வழி பிரதமர் அலுவலகத்துக்கும் ரயில்வே அமைச்சருக்கும் அந்தப் பெண் புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
காவலர்கள்ரயில்பயணம்