புதுடெல்லி: நாட்டின் மற்ற மாநிலங்களில் கட்சிகளைத் துண்டாக்கியது போல் ஆந்திராவில் தெலுங்கு தேசம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சேர்ந்து உடைப்பார்கள் என்று சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சஞ்சய் ராவத், நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014, 2019ஆம் ஆண்டுகள் போல் அல்லாமல் முற்றிலும் நிலையற்றதாகவே இருக்கும். இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியையும் மோடியும் அமித்ஷாவும் விரைவில் உடைப்பார்கள். தேஜ கூட்டணியில் கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாஜக வேட்பாளருக்கு மக்களவை சபாநாயகர் பதவி கிடைக்காவிட்டால் கட்சிகளை உடைக்கும் வேலையை அவர்கள் நிச்சயம் செய்து முடிப்பார்கள். பாஜகவின் தந்திரங்களை நன்கு உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் மக்களவை சபாநாயகர் பதவி பா.ஜ.க-வுக்கு செல்லப்போகிறதா அல்லது தெலுங்கு தேசம் கட்சிக்கு செல்லப்போகிறதா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 26.6.2024ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால் இந்தியா கூட்டணியின் ஆதரவை வழங்குவோம் என சிவசேனா (உத்தவ் தாக்கரே) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.