டெல்லியில் தண்ணீர் கேட்டு மாபெரும் போராட்டம்

டெல்லியில் தண்ணீர் கேட்டு மாபெரும் போராட்டம்

2 mins read
a7e45e22-c78b-442d-86c4-520b393d511c
தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கண்டித்து டெல்லி முழுவதும் பல இடங்களில் திங்கட்கிழமை போராட்டங்கள் நடந்தன. டெல்லி கீதா காலனி பகுதியில் நடந்த போராட்டத்தில் டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்சீவ்தேவா கலந்துகொண்டார். - படம்: ஐஏஎன்எஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதைச் சமாளிக்க டெல்லி அரசு தண்ணீர் வண்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. இருப்பினும் அந்த தண்ணீர் விநியோகம், மக்களின் முழுமையான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை.

டெல்லி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் டெல்லியின் பல பகுதிகளில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சில இடங்களில் பாஜகவினரும் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தில் சதார்பூரில் உள்ள டெல்லி குடிநீர் வாரிய கட்டடத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த அலுவலகத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.

பாஜகவினர்தான் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன் தாக்குதல் தொடர்பான ஒரு காணொளியைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அந்தக் காணொளியில், தாக்குதலில் ஈடுபட்டவர் பாஜகவின் கொடி வண்ணத்தில் துண்டு அணிந்திருக்கிறார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு புறம் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. மறுபுறம், பாஜகவினர் டெல்லி மக்களின் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்,” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறும்போது, “பொதுமக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் கோபத்தில் இருக்கின்றனர். அப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இயற்கையானதுதான். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜகவினர்தான் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில் அரசின் சொத்துகளைச் சேதப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை,” என்று அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பொதுக் குழாய்கள், தண்ணீர் வாகனங்கள் போன்றவற்றில் தண்ணீர் பிடிப்பதில் அவ்வப்போது வாய்ச்சண்டையும் அடிதடியும் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

டெல்லியின் துவாரகா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்