இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் திங்கட்கிழமை காலை இரு ரயில்கள் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி என்னும் பகுதியில் ரங்கபாணி ரயில் நிலையம் அருகே காலை 8.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து கோல்கத்தாவின் சீல்டா ரயில்நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சென்றுகொண்டு இருந்தது.
ரங்கபாணி ரயில் நிலையம் அருகே அந்த ரயில் நின்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு ரயில் திடீரென்று மோதியது.
மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதின. ரயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ரயிலில் இருந்து இறங்கி ஓடத் தொடங்கினர்.
விபத்தில் ஐவர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. பின்னர், மாண்டோர் எண்ணிக்கை 9ஆகவும் காயமடைந்தோர் எண்ணிக்கை 40ஆகவும் அதிகரித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்றன.
போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்குக் கட்டுப்படாமல் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் சரக்கு ரயிலின் ஓட்டுநரும் பலியானோரில் ஒருவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
ரயில் விபத்துக்கு அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்காள ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரங்கபாணி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இரு வழித்தடங்களிலும் தானியங்கி போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் உள்ளன. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இந்த வழித்தடம் இணைக்கிறது.

