போபால்: மத்தியப் பிரதேசத்தில் மதுபான ஆலை ஒன்றில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த 58 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 19 பேர் சிறுமியர்.
குழந்தைத் தொழிலாளர்கள் மதுபான ஆலையில் வேலை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ மற்றும் அவருடைய குழுவினர் இணைந்து அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
ரெய்சன் மாவட்டத்தில் செஹத்கஞ்ச் பகுதியில் இருந்த சோம் என்ற மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து, 58 குழந்தைத் தொழிலாளர்கள் சனிக்கிழமை (ஜூன் 15) மீட்கப்பட்டனர். இதன்பின்பு, அவர்கள் அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிபிஏ என்னும் தொண்டூழிய அமைப்பின் உதவியோடு குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் மற்றும் மதுபானக் கலவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்தக் குழந்தைகளின் கைகளில் தீக்காயங்கள் இருந்ததாகவும் பிபிஏ தொண்டூழிய அமைப்பு கூறியது.
“குழந்தைகளைக் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்திருந்த நிறுவனத்தில் இருந்து பள்ளிப் பேருந்தில் தினமும் வேலைக்கு அக்குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
“தினமும் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அந்தக் குழந்தைகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்,” என்றும் அது தெரிவித்தது.
இதற்கிடையே, மதுபான ஆலையில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்து உள்ளார்.