தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புலனாய்வுத்துறை விசாரணைக்கு எடியூரப்பா முன்னிலை

2 mins read
7f649467-702c-40a7-8007-5f8cc6e936cf
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பி.எஸ். எடியூரப்பா. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பி.எஸ். எடியூரப்பா சிறுமியை மானபங்கம் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்பதால் அவர் முன்கூட்டியே உயர்நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார். அதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

அத்துடன் எடியூரப்பா ஜூன் 17ஆம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து அவர், திங்கட்கிழமை விசாரணைக்காக புலனாய்வுத்துறை அலுவலகத்தில் முன்னிலையானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கைப்பேசியில் படமாக்கப்பட்ட காணொளியின் தடயவியல் ஆய்வுக்கூட முடிவு அறிக்கையை சிஐடி பெற்றுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையிலும், சாட்சிகளின் வாயை அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதன் அடிப்படையிலும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவிடம் புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உதவி நாடி, டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்திற்கு வந்த சிறுமியை மானபங்கம் செய்ததாக எடியூரப்பா மீது புகார் எழுந்தது. பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் 17 வயதுச் சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சதாசிவம் நகர் காவல் துறை அதிகாரிகள் எடியூரப்பா மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17ஆம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். ஆனால், அவர் நுரையீரல் புற்றுநோய் காரணமாக புகார் கொடுத்த சில நாள்களிலேயே உயிரிழந்தார். அதையடுத்து அந்தத் தாயின் சகோதரர் எடியூரப்பாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்து வருகிறார். அத்துடன், தனக்கு எதிரான சதிச் செயல்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்