துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக மறுப்பு

துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக மறுப்பு

2 mins read
1e3828ef-e4ff-4f50-b9bb-613c6e049d52
நாடாளுமன்றம் ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் நாடாளுமன்றம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூன் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் 2 நாள்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். நாடாளுமன்றச்  சட்ட முறைப்படி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிகத் தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

அவருக்கு அதிபர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் நாடாளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பாஜக மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.

எனவே சபாநாயகர் பதவியைப் பாரதிய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பாஜக தலைவரும், பாஜக எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25ஆம் தேதி தெரிந்து விடும்.

அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26ஆம் தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பாஜக ஏற்க மறுத்துள்ளது.

துணை சபாநாயகர் பதவியைக் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாஜக மேலிடம் நியமனம் செய்துள்ளது.

ராஜ்நாத்சிங் கூட்டணிக் கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாள்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்