தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெகன் மோகன்: மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட வேண்டும்

2 mins read
0f207e2e-02e4-42a6-a9cb-05fce2ebc010
மத்திய அரசு வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

ஹைதராபாத்: நம் ஜனநாயகத்தின் உண்மையை நிலைநாட்டும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெற்று வருகின்றன.எனவே, நமது ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் வகையில் இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மத்திய அரசு வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அத்துடன் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில், அண்மையில் எக்ஸ் தள உரிமையாளரும் அமெரிக்காவின் தொழில் அதிபருமான எலான் மஸ்க், மின்னணு வாக்கு எந்திரங்களை மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஊடுருவி முறைகேடு செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக நிராகரித்தது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்தவித இணைய இணைப்போ, வைஃபை இணைப்போ, புளூடூத் இணைப்போ இல்லாதவை என்று பதிலளித்தது. ஆனால் எந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும் ஹேக் செய்ய முடியும் என எலான் மஸ்க் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பை வடமேற்கு நாடாளுமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம், அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற சிவசேனா ஷிண்டே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவரின் திறன்பேசியுடன் இணைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. இது மேலும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திராவின் ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்