ரயில்கள் மோதலுக்குக் காரணம் சமிக்ஞை விவகாரமா, ஓட்டுநரின் தவறா: விசாரணை தொடங்கியது

2 mins read
8da6f265-4723-4508-88bb-2ddd4df3e49d
விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகள். - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: இந்தியாவில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பான விசாரணை தொடங்கி உள்ளது.

அந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக, மாண்டோர் எண்ணிக்கை 15 என்று குறிப்பிடப்பட்டு பின்னர் அதிகாரிகளால் திருத்தப்பட்டது.

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்காளத் தலைநகர் கோல்கத்தா நோக்கிச் சென்ற கஞ்சன் ஜங்கா என்னும் பயணிகள் விரைவு ரயில் ஓரிடத்தில் நின்றுகொண்டு இருந்தபோது பின்னால் வந்த சரக்கு ரயில் அதன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி ஒன்றோடொன்று மோதின.

இதற்கிடையே, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையை இந்தியாவின் உயர்மட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியதாக வடகிழக்கு எல்லை ரயில்வே பொது மேலாளர் சேத்தன் குமார் ஸ்ரீவஸ்தவா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

விபத்து நிகழ்ந்த ரயில் பாதையில் ‘கவச்’ என்னும் தானியங்கி விபத்துத் தடுப்பு தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாலசோா் ரயில் விபத்துக்குப் பிறகு ரயில் பாதைகளில் ‘கவச்’ தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. சமிக்ஞை கோளாறு காரணமாக அந்த விபத்தில் 288 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவா் ஜெயா வா்மா சின்ஹா கூறுகையில், “ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா – சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்துத் தடுப்பு தொழில்நுட்பம், திட்டமிட்டபடி இன்னும் நிறுவப்படவில்லை.

“அதனால் வழக்கத்தைக் காட்டிலும் குறைவான வேகத்தில் செல்லுமாறு சமிக்ஞை காட்டப்படும்.

“சரக்கு ரயில் ஓட்டுநா் அந்த சமிக்ஞையை பொருட்படுத்தாமல் மீறியதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். விபத்தில் ரயில் பாதுகாவலர் பெட்டி, பொருள்கள் ஏற்றிச்செல்லும் பெட்டி ஆகியவற்றுடன் பயணிகள் பெட்டி ஒன்றும் மோசமாக சேதமடைந்தன. மற்ற பயணிகள் பெட்டிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை,” என்றாா்.

விபத்தில் உயிரிழந்த 9 பேரில் சரக்கு ரயில் ஓட்டுநரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரக்கு ரயில் மோதியபோது பயணிகள் ரயிலில் 1,400 பேர் இருந்ததாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ரயில்விபத்துமரணம்