ஒடிசாவில் மோதல்: பாலசோர் பகுதியில் ஊரடங்கு

ஒடிசாவில் மோதல்: பாலசோர் பகுதியில் ஊரடங்கு

2 mins read
f4939afd-632d-4eb4-8f6e-77e6ca6d4210
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் பாலசோர் பரபரப்பான சாலை. - படம்: ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் இரண்டு சமூகத்தினர் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் அந்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் வழிபாடு நடத்தியபோது ஆடு, மாடுகளைப் பலிகொடுத்து அங்குள்ள முக்கிய சாலையை ஆக்கிரமித்தனர். அதனால், அப்பகுதியில் வாழும் இரண்டு சமூகத்தினரிடையே கலவரம் மூண்டது. அதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அவர்களைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

இதனால் காவல்துறை மற்றும் அந்த இரு சமூகத்தினர் என மூன்று தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் காவல்துறை உள்ளிட்ட பலருக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலவரம் நடந்த பாலசோர் பகுதி முழுவதும் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

பாலசோர் நகரில் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலசோர் நகர் முழுவதும் காவல்துறை சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. திங்கள்கிழமை (17.8.2024) முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஒடிசாவின் புதிய முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, பாலசோர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு, அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்