திறப்பு விழாவிற்கு முன் இடிந்து விழுந்த பாலம்

திறப்பு விழாவிற்கு முன் இடிந்து விழுந்த பாலம்

1 mins read
5cca346a-8a16-48dc-8a9a-57d6b83cd713
பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள சிக்டி பிளாக் பகுதியில் உள்ள பாட்கியா காட் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து பக்ரா ஆற்றில் விழுந்தது. - படம்: பிடிஐ

பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சா காந்தா மற்றும் சிக்டி பகுதிகளை இணைக்கும் வகையில் பக்ரா ஆற்றின் மீது பாலம் ஒன்று ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டபோதிலும் பாலத்தின் அருகே சாலைகள் அமைக்கப்படாததால் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது.

பணிகள் நிறைவடைந்து பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புதிய பாலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) அன்று திடீரென இடிந்து விழுந்தது. எனினும் இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. சம்பவத்தின் போது கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் இருந்தார்களா என்பது குறித்து எந்தவொரு தகவலையும் இந்திய ஊடகம் வெளியிடவில்லை.

இதனிடையே நொடிப்பொழுதில் பாலம் இடிந்து ஆற்றில் விழும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக தளங்களில் வெளியாகி பரவலானது. திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததும், இதில் ஒருவர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்