நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தைத் திறந்துவைத்தார் மோடி

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தைத் திறந்துவைத்தார் மோடி

2 mins read
316a810b-d37c-492c-98aa-ad41d115a425
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று (ஜூன் 19) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாள்களுக்குள் நாளந்தாவை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமை, ஒரு கதை. நெருப்பால் புத்தகங்களை எரிக்க முடியும் ஆனால் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா நிலைநிறுத்துகிறது,” எனத் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

“நாளந்தாவின் மறுமலர்ச்சி, இந்தியாவின் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும். உலகில் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம். உலகின் மிக முக்கிய அறிவு மையம் எனும் இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் உருவாக்குவதே எனது நோக்கம்,” என்றார் பிரதமர் மோடி.

“வலுவான மனித விழுமியங்களின் மீது நிற்கும் நாடுகள், வரலாற்றைப் புதுப்பிப்பதன் மூலம் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை எவ்வாறு அமைப்பது என்பது அந்த நாடுகளுக்குத் தெரியும். அனைத்துலக யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

“நூற்றுக்கணக்கான யோகா ஆசனங்கள் இந்தியாவில் உள்ளன. இதற்கு நம் ஞானிகள் எவ்வளவு தீவிர ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும்! ஆனால், யோகாவில் யாரும் ஏகபோகத்தை உருவாக்கவில்லை. இன்று உலகம் முழுவதும் யோகாவை ஏற்றுக்கொள்வதால், யோகா தினம் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது,” எனப் பிரதமர் மோடி கூறினார்.

இந்தப் புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் புதிய வளாகத்துக்கு உள்ளே சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தின் மதிப்பு ரூ.1700 கோடி ஆகும்.

இந்தத் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர். அதோடு நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
பல்கலைக்கழகம்வளாகம்பிரதமர்நரேந்திர மோடிதிறப்புவிழா