மும்பை: மும்பையில் இணையம் வழி வாங்கப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் அந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த விரல் ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்த ஊழியரின் விரல் எனக் காவல்துறை விசாரணையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் பிரெண்டன் ஃபெராவ் மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வருகிறார்.
சில நாள்களுக்கு முன்னர், டாக்டர் ஃபெராவ், இணையச் செயலி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியிருந்தார்.
அதைத் திறந்து பார்த்தபோது அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருந்ததைக் கண்டு டாக்டர் ஃபெராவ் அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஐஸ்கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் அண்மையில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பரிசோதனையில் விரலில் உள்ள டிஎன்ஏ மாதிரிகளும், அந்த நபரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போனதாகத் தெரியவந்தது. அதனை அடுத்து, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுவரை அதிகாரபூர்வமாக ஏதுவும் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

