தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6 பில்லியன் ‘மேகி நூடல்ஸ்’ பாக்கெட் விற்பனை: முதன்மை சந்தையாக இந்தியா

2 mins read
9dcbaa5c-9743-40b6-b023-dc40df32c528
இரண்டே நிமிடங்களில் செய்துவிடலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் 80களின் தொடக்கத்தில் இந்திய இல்லங்களில் நுழைந்த மேகி, அதன் பிறகு தவிர்க்க முடியாத உணவாக மாறியது.  - படம்: இந்திய ஊடகம்

சுவிட்சர்லாந்து: வரும் நிதியாண்டில் இந்தியா தனது முதன்மையான சந்தையாகத் திகழும் என ‘மேகி நூடல்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் 6 பில்லியன் மேகி பாக்கெட்டுகள் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈயம் கலந்ததாக சர்ச்சை, தடைவிதிப்பு, தடை நீக்கம் என 9 ஆண்டுகளில் கைவிட்டுப்போன சந்தையை ‘மேகி நூடல்ஸ்’ மீண்டும் தன்வசப்படுத்தியது.

சுவிட்சர்லாந்தைத் தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே, பல்வேறு பொருள்களைத் தயாரித்தாலும் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் அடையாளம் ‘மேகி நூடல்ஸ்’தான்.

இரண்டே நிமிடங்களில் செய்துவிடலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் 80களின் தொடக்கத்தில் இந்திய இல்லங்களில் நுழைந்த மேகி, அதன் பிறகு தவிர்க்க முடியாத உணவாக மாறியது.

நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ‘மேகி நூடல்ஸ்’ தனது சந்தையை விரிவுபடுத்தினாலும் மற்றொரு பக்கம் ஆரோக்கியமானதா என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

‘மேகி நூடல்ஸ்’இல் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஈயம் இருப்பதாகக் கூறி, இந்தியா உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அதற்குத் தடை விதித்திருந்தது.

அந்தத் தடை காரணமாக இந்தியாவில் தனது சந்தையை முழுமையாக இழந்தது மேகி நிறுவனம்.

ஒரே மாதத்திற்குள் அதன் விற்பனையும் முற்றிலும் சரிந்தது.

அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி, மேகியின் போட்டியாளர்களான ‘யிப்பி’, ‘டாப் ராமென்’ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சந்தையை விரிவுபடுத்தின.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் தங்கள் மீதான தடை 5 மாதங்களுக்குப் பிறகு நீங்கிய நிலையில், மீண்டும் களமிறங்கியது மேகி.

அதன் பிறகு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், புதிய பொருள்கள் ஆகியவற்றை அது அறிமுகப்படுத்தியது.

மேகி, ஒன்பது ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவின் நூடல்ஸ் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

2023-2024ம் நிதியாண்டில் ஆறு பில்லியன் ‘மேகி நூடல்ஸ்’ பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது. 

குறிப்புச் சொற்கள்