டெல்லி அமைச்சர்: தண்ணீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு இல்லையெனில் உண்ணாவிரதம்

டெல்லி அமைச்சர்: தண்ணீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு இல்லையெனில் உண்ணாவிரதம்

2 mins read
149993db-a96b-42d4-b5e3-db4a7ba28118
புதுடெல்லி வாஸிராபாத் பகுதியில் உள்ள தண்ணீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிடுகிறார் அமைச்சர் அதிஷி. - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: புதுடெல்லி மக்கள் எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீர்ப் பிரச்சினையைப் போக்க நடவடிக்கை எடுக்காவிடில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, டெல்லி தண்ணீர்ப் பிரச்சினைக்கு இரண்டு நாள்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார். அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில், வரும் ஜூன் 21ஆம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அதிஷி கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் டெல்லிக்குத் தர வேண்டிய 613 எம்ஜிடி தண்ணீருக்குப் பதில் 513 எம்ஜிடி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது.

டெல்லியில் வெயில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தச் சூழலில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே 31ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை நாடியது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு. அந்த மனுவில் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கோரிக்கை வைத்தது. தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் கூடுதல் நீரை திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும், நீர் இல்லை என்ற இமாச்சல் கைவிரித்து விட்டது.

டெல்லியில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஹரியானா நீர் வழங்காதது தான் என ஆம் ஆத்மி அரசு கூறி வருகிறது. மறுபக்கம் தண்ணீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து டெல்லி பாஜக கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்