அமராவதி: ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முந்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட அமராவதி தலைநகரத் திட்டம் புத்துயிர் பெறுகிறது.
முற்றிலும் பசுமை நகராக அதனை உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கு இடையில் 29 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் அமையும் தலைநகரில் நீடித்து நிலைக்கக்கூடிய சுற்றுச்சூழல் அம்சங்கள் நிறைந்திருக்கும்.
உலகின் தலைசிறந்த ஐந்து தலைநகரங்களில் ஒன்றாக அமராவதி உருவாகும் என்று ஆந்திரப் பிரதேச அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
மேலும், இந்தியாவில் இப்படி ஒரு நகரம் இல்லை என்கிற அளவுக்கு ஆகச் சிறப்பான ஒன்றாக அமராவதி உருவெடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குண்டூர் மாவட்டத்தில் 217 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள திறந்தவெளித் திடலில் அந்த நகரம் உருவாக்கப்படுகிறது.
தற்போதைய வடிவமைப்பின்படி 51 விழுக்காடு பசுமை வெளிகள் அமராவதியில் இடம்பெறும். இந்தப் பெருநகரை உருவாக்க சிங்கப்பூர் முன்மாதிரியாக எடுக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கம் இதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு ஆலோசகர்களை நியமித்து உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சிறப்பு அம்சங்களை அமராவதியில் உள்ளடக்க அவ்வாறு செய்யப்பட்டு உள்ளதாக இந்தியாவின் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
கூடுதலாக வெளிநாட்டு ஆலாசகர்களும் கட்டடக்கலை நிபுணர்களும் அமராவதித் திட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அமராவதிக்கு மிகச் சிறப்பான வடிவத்தைக் கொடுக்க சிங்கப்பூர், சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆந்திராவுக்கு வருகை தந்ததாக அந்த மாநிலத்தின் நகராட்சி நிர்வாக அமைச்சர் பி நாராயணா தெரிவித்து உள்ளார்.
ஆந்திராவில் உள்ள எல்லா மாவட்டங்களும் பொருளியல் பலன்களை அடையும் வகையில் அமராவதி வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து சாலைகள், வடிகால்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. அந்தப் பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை (ஜூன் 20) அமராவதி சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமராவதி சுற்றுசாலைகள், ஐஏஎஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கட்டப்படும் வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்களை அவர் பார்வையிட்டார்.
கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.