பாட்னா: அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தாக பீகாரில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
24 லட்சம் மாணவர்கள், மே 5ம் தேதி எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக பீகாரில் 3 மாணவர்களும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், “நீட் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கிடைத்தது. அதனை நன்கு படித்து தேர்வுக்கு தயாரானோம். இதில் இருந்த கேள்விகளே, மறுநாள் தேர்வு எழுத சென்ற போது கேட்கப்பட்டது,” எனக் கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.

