தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

2 mins read
5d7daa12-0dae-41bc-8926-b05f4daf68e1
புதுடெல்லியின் ஜானக்புரா பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுடெல்லி மாநில அமைச்சர் அதிஷி மர்லேனா (நடுவில்). - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் அண்மை காலமாக மோசமான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாகத் திறந்து விடாததால் தான் இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அரியானாவிடம் இருந்து டெல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புதுடெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூன் 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள திருவாட்டி அதிஷி, டெல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியின் ஜானக்புரா பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதிஷி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியபோது, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திஹார் சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால், அதிஷியின் போராட்டம் வெற்றி பெறும் என கடிதம் மூலம் சொல்லியிருந்தார். இதனை சுனிதா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஜூன் 21ஆம் தேதி வரை சுமார் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அநீதிக்கு எதிராகப் போராட சத்யாகிரக பாதையை பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதன்படி நான் என் போராட்டத்தைத் தொடங்குகிறேன்,” என டெல்லி அமைச்சர் அதிஷி கூறியிருந்தார்.

அதே நேரம், ஆம் ஆத்மி அரசு சட்டவிரோதமாக லாரியில் தண்ணீர் விநியோகிக்கவும் ஊழலை ஆதரிக்கவும் டெல்லியில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்