மனித இனத்திற்கு இந்தியா கொடுத்த தனித்துவமான பரிசு யோகா: திரௌபதி முர்மு

மனித இனத்திற்கு இந்தியா கொடுத்த தனித்துவமான பரிசு யோகா: திரௌபதி முர்மு

2 mins read
0d311914-fe50-4b8c-96a9-f97d63a899d3
அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் ஷெர்-இ-காஷ்மீர் அனைத்துலக மாநாட்டு உள்புற மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி. - படம்:இபிஏ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா முழுவதும் அனைத்துலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய அதிபர் திரௌபதி முர்மு அதிகாரிகளுடன் இணைந்து அதிபர் மாளிகையில் யோகாசனம் செய்தார்.

“வாழ்க்கைமுறை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் யோகா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. யோகா என்பது மனித இனத்திற்கு கொடுக்கப்பட்ட இந்தியாவின் தனித்துவமான பரிசு,” என அதிபர் முர்மு கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அனைத்துலக யோகா தினத்தில் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இந்தியாவின் குடிமக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். யோகா என்பது மனித இனத்திற்கு இந்தியாவின் தனித்துவமான பரிசு. யோகா என்பது உடல், மன, ஆன்மிக நல்வாழ்வுக்கான ஒரு வழியாகும். நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் நடைபெற்ற அனைத்துலக யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அங்குள்ள தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 10வது அனைத்துலக யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

“மக்கள் தங்கள் நலன், உலக நலனுடன் இணைந்திருப்பதை உணர யோகா உதவியுள்ளது. உலக நன்மைக்கு முக்கியமான, சக்திவாய்ந்த முகவராக யோகாவை உலகம் பார்க்கிறது,” என்றார் இந்திய பிரதமர்.

“கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி நினைக்காமல், நிகழ்காலத்தில் நலமாக வாழ யோகா உதவுகிறது. நமது உள்ளுணர்வு அமைதியாக இருக்கும்போதுதான் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

யோகா, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு புதிய வழிகளை உருவாக்குகிறது என்றார் அவர்.

முன்னதாக, மாநாட்டு மைய புல்வெளியில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக ஷெர்-இ-காஷ்மீர் அனைத்துலக மாநாட்டு உள்புற மையத்தில் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்