புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன் 21ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
பீகாரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகிலேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் காங்கிரஸ் பிரதிநிதிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், எந்த விலை கொடுத்தேனும் மாணவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம் என உறுதிபடக் கூறினர்.
நாகலாந்து, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

