காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் மீது பேனா மை தாக்குதல்

1 mins read
9bf99160-a491-40c3-b53a-2e6a13550198
அடையாளம் தெரியாத சந்தேகப் பேர்வழிகளால் பேனா மை வீசப்பட்ட பின்னர் சரத் பட்நாயக் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: டெக்கான் கிரானிக்கல் 

புவனேஸ்வர்: ஒடிசா காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பட்நாயக் மீது அடையாளம் தெரியாத சில சந்தேகப் பேர்வழிகள் வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் பேனா மை வீசி தாக்குதல் நடத்தினர்.

காங்கிரஸ் பவனில் உள்ள அவரது அறையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது அறைக்கு வெளியே உள்ள கதவின் மீதும் சிலர் பேனா மையை வீசிச் சென்றனர்.

மை தாக்குதலின் பின்னணியில் பாஜக இருப்பது போல் சந்தேகிப்பதாக சரத் பட்நாயக் கூறியுள்ளார்.

“ஒடிசாவில் காங்கிரஸ் மெல்ல மெல்ல காலூன்றி வருகிறது. நீட் ஊழலை அம்பலப்படுத்துவதற்காக மாணவர்களுடன் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசித்தோம். அப்போது, ஒரு சிலர் மை வீசினர். என் கண்கள் எரிவதால் அதில் ஆசிட் அல்லது வேறு ஏதேனும் பொருளைச் சேர்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை,” என்றும் பட்நாயக் கூறினார்.

“மகாத்மா காந்தியால் போதிக்கப்பட்ட உண்மை, அகிம்சையின் அடிச்சுவடுகளை நாங்கள் பின்பற்றுகிறோம். எதிர்த்தரப்பினர் காந்திஜியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் பின்தொடர்கின்றனர்.

“கடந்த 40 ஆண்டுகளாக எனது இளமைப் பருவம் முதல் காங்கிரசில் இருந்து வருகிறேன். அரசியலில் நமக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்படும். அதேவேளையில் சில சமயங்களில் செருப்பு, அமிலம், கற்கள் போன்றவற்றால்கூட தாக்கப்படுவோம். மை வீச்சு எனக்கு ஒன்றும் புதிதல்ல,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்