மல்லிகார்ஜுன கார்கே: எல்லாமே கண்துடைப்பு

மல்லிகார்ஜுன கார்கே: எல்லாமே கண்துடைப்பு

2 mins read
16eef63a-b90f-4ad2-aab2-9a1bddf80895
நீட் தேர்வில் பல மோசடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ‘நீட்’ உட்பட பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுப்பதற்காக மத்திய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுத்தல்) சட்டம், 2024’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த சட்டம் வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

“கடந்த ஏழு ஆண்டுகளில் 70 வினாத்தாள்கள் கசிந்து உள்ளன. ஆனால் பாரதிய ஜனதா இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா எவ்வளவு முயற்சி செய்தாலும், ஊழல் மற்றும் கல்வி மாபியாவை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது,” என குறிப்பிட்டு உள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அதிபரின் ஒப்புதலை பெற்றிருந்தும் தாமதமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள கார்கே, இந்த விவகாரத்தில் சட்டம் அமல்படுத்தப்பட்டது என கல்வி அமைச்சர் ஏன் பொய் கூறினார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை இன்னும் சட்ட அமைச்சகம் வகுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினர்.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாகக் கூறி 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்