இந்தியாவில் விரைவான குடிநுழைவு அனுமதி: புதிய திட்டம் அறிமுகம்

இந்தியாவில் விரைவான குடிநுழைவு அனுமதி: புதிய திட்டம் அறிமுகம்

2 mins read
5d1472dc-6b28-4105-b5d0-e8b59e3bd48e
புதிய குடிநுழைவு அனுமதி முறையை டெல்லி விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவுக்கு வரக்கூடிய விமானப் பயணிகள் குடிநுழைவு நடைமுறைகளை எளிதில் முடித்து சிரமமின்றி விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேற புதிய திட்டம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

‘விரைவான குடிநுழைவுத் தடம் - நம்பகமான பயணிகள் திட்டம்’ (FTI-TTP) என்னும் அத்திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை (ஜூன் 22) தொடங்கி வைத்தார்.

முன் சரிபார்க்கப்பட்ட இந்திய நாட்டவர்களும் ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்களும் இந்தப் புதிய வசதிக்குத் தகுதி பெறுவர்.

வெளிநாடுகளில் இருந்து இந்திய விமான நிலையத்திற்கு வரும்போது மின்வாயில் அல்லது தானியக்க எல்லை வாயில் மூலம் அவர்கள் விரைவாக வெளியேறலாம்.

முன்கூட்டி இணையம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவிடுவதால் குடிநுழைவு அனுமதிக்கான வரிசையில் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் நேராது.

இந்தியாவில் உள்ள 21 அனைத்துலக விமான நிலையங்களிலும் இது கட்டம் கட்டமாக அறிமுகம் காணும்.

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கோல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 8 அனைத்துலக விமான நிலையங்களில் தொடங்கப்படுகிறது.

டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துவிட்டதால் எஞ்சியுள்ள ஏழு விமான நிலையங்களில் இந்த விரைவு குடிநுழைவு அனுமதி முறை அடுத்தடுத்து அமலாக உள்ளது.

இரண்டாவது கட்டமாக 13 அனைத்துலக விமான நிலையங்களிலும் இந்தப் புதிய முறை அறிமுகம் கண்டதும் இந்தியா முழுவதும் விரைவான குடிநுழைவு அனுமதி முறை இயங்கும். அப்போது, வெளிநாட்டவர்களும் இதில் சேர்க்கப்படுவர்.

அறிமுகம் கண்ட விமான நிலையங்களில் மின்வாயில்கள் அல்லது தானியக்க எல்லை வாயில்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

சுறுசுறுப்பாக இயங்கும் விமான நிலையங்களின் குடிநுழைவு முகப்புகளில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க இந்தப் புதிய முறை உதவும். மேலும், விரைவான, சுலபமான, மகிழ்ச்சியான விமானப் பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

மின்வாயில்கள் மூலம் அனைத்துலகப் பயணிகளுக்குக் குடிநுழைவு அனுமதி வழங்கும் இதேபோன்ற ஏற்பாடு அமெரிக்காவில் ஏற்கெனவே இயங்கி வருவதாகவும் அது குறிப்பிட்டது.

இந்த வசதியைப் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான பிற தகவல்களுடன் ‘பயோமெட்ரிக்ஸ்’ (விரல்ரேகை/முகம்) சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அனுமதி ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது இந்திய கடப்பிதழின் முதிர்வு தேதி வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சுலபமான, விரைவான குடிநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: http://www.ftittp.mha.gov.in என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்