புதுடில்லி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி ‘இண்டியா’ கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தது.
3வது முறையாக மோடி பிரதமரானார்.
இந்த நிலையில் 18வது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜூன் 24) தொடங்கியது.
முதல்நாளில் வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான ‘இண்டியா’ கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அணிவகுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அணி வகுத்து நாடாளுமன்றத்துக்குச் சென்றனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நடைபெற்ற போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

