உங்கள் அன்புதான் என்னைப்பாதுகாத்தது: ராகுல் காந்தி உருக்கம்

உங்கள் அன்புதான் என்னைப்பாதுகாத்தது: ராகுல் காந்தி உருக்கம்

2 mins read
3c3ec1cc-02eb-46d0-9307-856be7633450
ஏப்ரல் 15ஆம் தேதி வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அவர் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) அன்று உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நான், நாளுக்கு நாள் அவமதிப்பை எதிர்கொண்டபோது உங்கள் நிபந்தனையற்ற அன்புதான் என்னை பாதுகாத்தது. நீங்கள்தான் எனக்கு அடைக்கலமாக, எனது வீடாக, எனது குடும்பமாக இருந்தீர்கள். நீங்கள் என்னை சந்தேகப்படுவதாக நான் ஒரு நொடிகூட உணரவில்லை. வயநாட்டில் நான் ஆற்றும் உரைகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம் சிறுமிகள் மொழிபெயர்த்து பேசும் துணிச்சல், அழகு மற்றும் நம்பிக்கையை மறக்க முடியாது.

“எனக்கு தேவைப்படும்போது நீங்கள் கொடுத்த அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது எனத் தெரியவில்லை. நீங்கள் எனது குடும்பத்தின் அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் எப்போதும் இருப்பேன். எனது சகோதரி பிரியங்காவுக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் அவர் வயநாட்டை பிரதிநிதிப்பார். உங்கள் எம்.பி.யாக அவர் மிகச்சிறந்த பணியை செய்வார்,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்