அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியின்போது ஒய்.எஸ்.ஆர். கட்சிக்காக ஆந்திரா முழுவதும் 26 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 42 ஏக்கர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவ்வாறு கட்டப்படும் கட்சி அலுவலகம் ஒவ்வொன்றும் அரண்மனை போல் கட்டப்படுவதாக ஆந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிலங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ.1,000 மட்டுமே வாடகை நிர்ணயிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்குக் குத்தகையும் போடப்பட்டுள்ளது.
தெலுங்குதேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் செய்த பல முறைகேடுகளை புதிய அரசு வெளிக்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே குண்டூர் தாடேபல்லி கூடத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமைக் கட்சி அலுவலகத்திற்காக 17 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அதில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அக்கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது.
குண்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியின் மத்திய அலுவலகம் புல்டோசர் கொண்டு கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன் மோகன் சவால் விடுத்துள்ளார்.
ஆந்திராவில் பல இடங்களில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஜெகன் மோகன், “ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை புல்டோசர் கொண்டு ஒரு சர்வாதிகாரி போல் இடித்துத் தள்ளி இருக்கிறார்,” என்று பதிவிட்டுள்ளார்.