புதுடெல்லி: இந்தியாவில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக கூட்டணியின் பிரதமர் மோடி, மும்மடங்கு கடினமாக நாட்டு மக்களுக்கு உழைப்போம் என்று உறுதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடியது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, “நாட்டு மக்கள் எங்களுக்கு பணியாற்ற 3வது முறையாக வாய்ப்பு அளித்துள்ளனர். இது சிறந்த, மிகப்பெரிய வெற்றி. எங்கள் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. எங்களுடைய 3வது ஆட்சியில் நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளைப் பற்றியும் அவர் பேசினார்.
“நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகளின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. 18வது நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் உள்ள வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.
“நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மரபை காத்து மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். நாடகம், இடையூறுகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அமளி, கோஷங்களையும் மக்கள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம். நாட்டிற்கு சிறந்த, பொறுப்பான எதிர்க்கட்சி அவசியம்,” என்று மோடி மேலும் தெரிவித்தார்.
பின்னர் நாடாளுமன்றம் கூடியபோது பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் மோடியை தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று வருகின்றனர்.

