எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, உண்ணாவிரதம் தொடரும்: கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அதிஷி

எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, உண்ணாவிரதம் தொடரும்: கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அதிஷி

2 mins read
c6281474-6710-4398-beb9-3a89af952610
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் அதிஷிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவர். - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்குத் திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி ஜூன் 21ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று கூறியிருக்கிறார்.

அவரது உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளாக நீடிக்கிறது. இதனால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதுபற்றி அதிஷி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில் கூறியிருப்பதாவது: “உண்ணாவிரதத்தால் என் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, உடல் எடை குறைந்துவிட்டது. கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது எனது உடல்நிலையைக் கடுமையாகப் பாதிக்கும். உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வேன். ஜூன் 23ஆம் தேதி மருத்துவர்கள் எனது உடல்நிலையைப் பரிசோதனை செய்தனர்.

“அரியானா அரசு கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் டெல்லியின் பங்கை ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன்கள் என்ற அளவுக்குக் குறைத்துள்ளது. இதனால், டெல்லிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி குழுவுடன் ஆளுநர் வி.கே.சக்சேனா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், “டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது பற்றி பரிசீலனை செய்வதாக அரியானா முதல் அமைச்சர் நயாப் சிங் சைனி உறுதி அளித்திருக்கிறார்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்