புதுடெல்லி: நீட் முதுநிலை, யுஜிசி-நெட் ஆகிய உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்தும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திங்கட்கிழமை (ஜூன் 24) டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அணிவகுத்து நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை காவல்துறை அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வழிகளில் தடுப்புகள் அமைத்து மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவர் என்றும் முறைகேட்டில் தொடர்பு உடைய அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர் என்றும் மத்திய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவின் லத்தூர், சோலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்த சஞ்சய் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

