புதுடெல்லி: மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாள்களில் 10 பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பட்டியலிட்டார்.
அந்தப் பத்துப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியைத் தப்பிக்க விடமாட்டோம் என்று ராகுல் சூளுரைத்துள்ளார்.
பிரதமர் ஆட்சிக்கு வந்த இந்தப் 15 நாள்களில் ரயில் விபத்து, பயங்கரவாதத் தாக்குதல், ரயில் நிலையங்களின் அவலநிலை, நீட் தேர்வு முறைகேடு, நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு, காட்டுத் தீ, தண்ணீர்ப் பற்றாக்குறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி ஏற்பட்ட வெப்ப அலை உயிரிழப்புகள் ஆகிய சம்பவங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் மீது மோடி மற்றும் அவரது அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
இந்தியாவின் வலுமிக்க எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஆளும் கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுக்கும் பணியைத் தொடர்ந்து செய்வோம். நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.

