அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயில் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது முதல் கனமழை பெய்யும் தருணங்களில் கருவறையின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதாக அதன் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் திங்கட்கிழமை தெரிவித்தார்.
“கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முழுதாக 6 மாதம் ஆவதற்குள் கூரையிலிருந்து நீர் கசிகிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோயில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தற்போதைக்கு ராம் லல்லா சிலைக்கருகே மழைநீர் தேங்குவதைச் சரிசெய்யாவிடில் வழிபாடுகளையும் பூசை நடைமுறைகளையும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் கோயில் கட்டுமானத்தின் நிறைவுறாப் பணிகள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார். திட்டமிட்டபடி ஜூலை 2025க்குள் ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் முழுமை அடைவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலின் மேற்கூரையைச் சரிசெய்து நீர்புகாமல் இருக்க உடனடி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

