புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
18வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24 கூடியது. திங்கட்கிழமை பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை உறுப்பினர்கள் ஜூன் 25 பதவியேற்றனர்.
இதனிடையே, மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்வு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, அரசுத் தரப்பில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதனை அரசு தற்போதே உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆளும் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டால் சபாநாயகரை ஆதரிப்பதாக கார்கே நிபந்தனை விதித்தார். இதையடுத்து, கார்கேயின் கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பிறகு தெரிவிப்பதாக ராஜ்நாத் சிங் கூறியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17வது மக்களவையின் சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருந்தார்.
ஆளும் கூட்டணியின் இந்த அறிவிப்பை அடுத்து, 8 முறை மக்களவைக்குத் தேர்வான மூத்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து செவ்வாய்க்கிழமை அவர் சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக சபாநாயகர் தேர்வில் போட்டி உறுதியாகி உள்ளது.
துணை சபாநாயகர் பதவியை வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு: ராகுல் காந்தி
“எதிர்க்கட்சிகளுக்குத் துணை சபாநாயகர் பதவியை வழங்கினால் மட்டுமே மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய சபாநாயகரை ஒருமனதாகத் தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள சூழலில், எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜ்ஜு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால், இன்னும் அழைக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

