பனாஜி: வேலையில்லாத இளைஞர்கள் பலரும் தங்களது வங்கிக் கணக்குகளை ரூ.1,000 தரகுத் தொகையைப் பெறுவதற்காக இணைய மோசடிப் பேர்வழிகளிடம் வாடகைக்குக் கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கோவா காவலர்கள் கூறுகையில், “சின்ன சின்ன வேலைகளில் ஈடுபட்டுவரும் இளைஞர்களைக் குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது.
“அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக வங்கிக் கணக்குகளை இதுபோன்ற மோசடிக் கும்பலுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.
“ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கிப் பரிவர்த்தனைக்கும் அந்த மோசடிக் கும்பல் ரூ.1,000த்தை தரகுத்தொகையாக வழங்குகிறது.
“சியோலிம் பகுதியைச் சேர்ந்த புவாசி என்ற குடியிருப்பாளர் தனது ரூ.45 லட்சம் பணத்தை இணைய வர்த்தகத்தில் இழந்ததாக கொடுத்த புகார் குறித்து விசாரித்தபோது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பல இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்தத் தொகை மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
“அண்மையில் பனாஜியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி ரூ.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அதே போல நகை வியாபாரி ஒருவரிடம் ரூ.2.5 கோடி சுருட்டப்பட்டது.
“அவர்களின் பணம் அனைத்தும் ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டு இணைய மோசடிக் கும்பல்களின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தனர்.

