பத்தான்கோட்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பத்தான்கோட் மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமங்களில் ஆயுதம் ஏந்திய நபர்கள் இருவர் நடமாடுவது தெரிந்தது.
அவர்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் காத்துவா வட்டாரத்தின் எல்லைக்கு அருகே இருக்கும் பத்தான்கோட்டில் புதன்கிழமையன்று (ஜூன் 26) பாதுகாப்புப் படைகள் அதிக விழிப்புநிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) கவனிக்கப்பட்டதாக எல்லைப் பகுதிக்கான துணை ஆய்வாளர் ராக்கேஷ் காவ்ஷல் தெரிவித்தார். அதனால் அப்பகுதியைச் சுற்றித் தடுப்புகள் போடப்பட்டு மற்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படைகள், ராணுவம், ஆகாயப் படை போன்ற அமைப்புகள் அவற்றில் அடங்கும்.
இதுகுறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளனர் என்றும் திரு ராக்கேஷ் காவ்ஷல் குறிப்பிட்டார்.

