ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவர் ஒருவரை மூத்த மாணவர்கள் சிலர் பகடிவதைக்கு ஆளாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அந்த மாணவரை மூத்த மாணவர்கள் துன்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் இது குறித்து அவர் புகார் எதுவும் கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்கவில்லை.
இதனிடையே கடந்த மே மாதம் 15ஆம் தேதி கல்லூரிக்கு அருகில் முதலாமாண்டு மாணவரை தோப்புக்கரணம் போடச் சொல்லி மூத்த மாணவர்கள் துன்புறுத்தியுள்ளனர். அந்த மாணவரை அவர்கள் கிட்டத்தட்ட 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அந்த மாணவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 20ஆம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு இணையம் மூலமாக புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதன் பிறகே, இந்தப் பகடிவதைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 7 மாணவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் இந்த புகாரின் அடிப்படையில் 2ஆம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

