வாஷிங்டன்: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் நிகழ்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை 2023ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சமயச் சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை புதன்கிழமை (ஜூன் 26) வெளியிட்டது.
அதில், “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து உள்ளன,” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சமய சுதந்திரப் பிரச்சினைகள் தொடர்பாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் தங்களது இந்திய சகாக்களுடன் தொடர்ந்து கவலை எழுப்பி வந்துள்ளதாகவும் அறிக்கை கூறியது.
மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கையில், “முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமியரின் சொத்துகளை இடிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.
“மணிப்பூரில் 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டதோடு 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 60,000 க்கும் அதிகமானோர் அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
“சில இந்திய மாநிலங்களில் சமயமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது போன்ற செயல்களும் சமய சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பி உள்ளன,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில், மூன்றாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் காண்பதாக மனித உரிமை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா மீது அமெரிக்கா குறைசொல்வது வழக்கமாக கட்டுக்குள் இருக்கும். காரணம், நெருக்கமான உறவு வைத்துள்ள பொருளியல் நாடு என்பதோடு சீனாவின் போட்டியைச் சமாளிக்க இந்திய உறவு அவசியம் என்று வாஷிங்டன் கருதுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
இதற்கிடையே, அறிக்கை குறித்த வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.
மேலும், இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்கள், உணவு மானிய திட்டங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற அனைத்துத் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது எனவும் தூதரகம் விளக்கமளித்திருக்கிறது.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள். 14 விழுக்காட்டினர் முஸ்லிம்களாகவும் 2 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.

