புதுடெல்லி: எமர்ஜென்சி எனும் அவசரநிலைப் பிரகடனம் குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வியாழக்கிழமை இடம்பெற்ற அதிபரின் உரையிலும் அவசரநிலைப் பிரகடனம் குறித்த கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
அதிபர் திரௌபதி முர்மு தனது உரையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
“1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனம், அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.
“அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது,” என்று தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு விசாரணை
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில், மத்திய அரசு முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக உள்ளது என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் திரௌபதி முர்மு கூறினார்.
வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுக்க, நாடாளுமன்றம் சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அதிபர் முர்மு, மத்திய அரசு நடத்தும் தேர்வுகள், பணி நியமனங்களில், ஒழுங்கும், வெளிப்படைத்தன்மையும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம்
தொடர்புடைய செய்திகள்
அவசரநிலைப் பிரகடனத்தை தனது உரையில் அதிபர் முர்மு குறிப்பிட்டதும் நீட் முறைகேடு, மணிப்பூர் கலவரம், அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து அதிபர் பேசியபோது, ‘மணிப்பூர், மணிப்பூர்’ என்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் குறித்து உரையாற்றியபோது ‘நீட் முறைகேடு, நீட் முறைகேடு’ என்றும் பாதுகாப்புத் துறை குறித்து பேசியபோது ‘அக்னிவீர், அக்னிவீர்’ என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முன்னதாக, புதன்கிழமை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவும் அவசரநிலைப் பிரகடனம் தொடர்பாக அவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

