செல்லப்பிராணிக்காக ரத்ததான உதவி கோரியுள்ள ரத்தன் டாடா

2 mins read
81818001-879d-4db2-8a20-eeedd6f82656
இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா, படத்தில் உள்ள நாய்க்குட்டிக்காகத்தான் உதவி கோரியுள்ளார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மும்பை: மும்பை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு மாத நாய்க்குட்டிக்கு ரத்த தானம் வழங்கும் நிலையில் உள்ள நாயைக் கண்டுபிடித்துத் தர உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா.

தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சிறப்புப் பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘நீங்கள் உதவினால் நான் மனதாரப் பாராட்டுவேன்’ எனும் தலைப்புடன் நாயின் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.

“எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள ஏழு மாத நாய்க்குட்டிக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது.

“நாய்க்குட்டி ‘டிக்’ காய்ச்சல், உயிருக்கு ஆபத்தான ரத்த சோகை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

“அதற்கு ரத்த தானம் செய்யக்கூடிய நாய்களை வைத்திருப்பவர்கள் அவசரமாகத் தொடர்பு கொள்ளவும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவர்கள் மும்பையில் வசிப்பவர்களாக இருந்தால் மிகவும் நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரத்தம் வழங்கும் நாயானது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானதாகவும் 1 முதல் 8 வயது வரை உள்ளதாகவும் 25 கிலோ அல்லது அதற்கு மேலான எடை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.

“அதற்கு அனைத்து வகையான தடுப்பூசியும் போடப்பட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அந்த நாய் எந்த நோய்க்கும் உள்ளாகாமல் இருக்கவேண்டும்,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நாய்க் குட்டிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +91 70218 50400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வலைத்தளவாசிகள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்