புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்; 7 பேர் காயமடைந்தனர்.
டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் முனையம் 1ன் மேற்கூரை திடீரென சரிந்தது.
அத்துடன், மேற்கூரையைத் தாங்கியிருந்த தூணும் உடைந்து விழுந்ததில், பயணிகளை இறக்கி, ஏற்றும் பகுதியில் நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன.
கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கூரை சரிந்து விழுந்த இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்புப் படையினர் ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1ன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பயணிகளுக்குச் சேவை புரியும் முகப்புகள் மூடப்பட்டு உள்ளன.
அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதியுற்றனர்.
சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது விமான நிலைய நிர்வாகம்.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இச்சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக அவர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

