ஹாவேரி: கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிற்றுந்து மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அதிகாலை 4 மணியளவில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிற்றுந்து மோதிய பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்கள் ஷிமோகா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.