புதுடெல்லி: மக்களவையில் நீட் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஒலிவாங்கி (மைக்) அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நீட் முறைகேடு குறித்து பேச வலியுறுத்தி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்திருந்தனர். அது குறித்து உடனே விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், அதிபரின் தீர்மானத்தை ஒத்திவைக்கக் கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது அவரது ஒலிவாங்கி அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டியுள்ளது.
அதற்குப் பதிலளித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், உறுப்பினர்களின் மைக்கை நான் அணைப்பதில்லை எனவும், அத்தகைய உரிமை எனக்கு இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
மேலும், “நாடாளுமன்றத்தில் அதிபர் உரை தொடர்பான விவாதமே நடைபெற வேண்டும். பிற விஷயங்கள் பதிவுசெய்யப்படமாட்டாது,” என்று பிர்லா கூறினார்.

