ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி முதல்வர் பொறுப்பில் இருந்து ஹேமந்த் சோரன் விலகிய பிறகு அவரை இந்த வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் மற்றும் அப்சர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுக்கு முன்னதாக ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரனை பல மணி நேரம் விசாரித்தது அமலாக்கத் துறை.
ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக 48 வயது சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், முதற்கட்ட தகவலின்படி ஹேமந்த் சோரன் குற்றவாளி இல்லையென்றும் அவர் பிணையில் இருக்கும் போது குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவரது வழக்கறிஞர் அருணாப் சௌத்ரி தெரிவித்தார்.
அதனடிப்படையில் ஹேமந்த் சோரனுக்கு பிணை வழங்க ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முன்வந்துள்ளது.
ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்டின் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு பிணை கோரி கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு ரத்து செய்யப்பட்டது.

