புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அன்று கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவு தொடர்ச்சியாகக் கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிர் இழந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை மக்கள் மின்சாரம் இன்றியும் குடிநீர் இன்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அங்கு மேலும் சில நாள்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக டெல்லியின் முக்கிய சாலைச் சந்திப்புகள் பல வெள்ள நீரால் மூழ்கிக் கிடக்கின்றன. போக்குவரத்து முற்றிலும் முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வசந்த் விகார் என்னுமிடத்தில் ஒரு கட்டுமானப் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் ஊழியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். மூவரின் உடல்களை தேசிய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வெள்ளிக்கிழமை மட்டும் 300க்கு மேற்பட்ட புகார்கள் வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வழக்கமாக 80.6 மி.மீ. பெய்யும் ஜூன் மாத மழையைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாகப் பெய்கிறது. வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் 228 மி.மீ. மழை பெய்துள்ளது. இது நூறு ஆண்டுகளுக்குப் பிறகான ஆக அதிகமான மழைப்பொழிவு என்று பொதுப் பணித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, டெல்லியில் பருவமழைக் காலம் முழுவதும் 800 மி.மீ. மழை பெய்துள்ளது. 1946ஆம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் இதுபோன்ற கனமழை பெய்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நீர்வளத்துறை, பொதுப் பணித்துறைகளில் பணிபுரிவோரின் விடுமுறையை ரத்து செய்து வேலைக்குத் திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதோடு, நீர்த்தேக்கங்களில் தூர்வாருவது, கால்வாய் அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

