புதுடெல்லி: நாட்டின் போக்குவரத்தை மேம்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல பில்லியன் டாலர் ஒதுக்கிச் செலவிட்டுவரும் நிலையில், டெல்லி விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது உள்ளிட்ட அண்மைய உள்கட்டமைப்புப் பேரிடர்கள், பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஜூன் 28 அன்று பெய்த மழையின்போது மேற்கூரை இடிந்து விழுந்ததையடுத்து, டெல்லியின் விமான நிலைய அதிகாரிகள் முனையம் 1ல் தொடர்ந்து வந்த நடவடிக்கைகளை ரத்து செய்தனர்.
அண்மையில் புதுப்பிக்கப்பட்ட விமானநிலையத்திற்கு வெளியே பல கார்கள் நசுக்கப்பட்டன, ஒருவர் கொல்லப்பட்டார், எட்டுப் பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் பெய்த ஒருநாள் மழை பதிவு செய்திருந்தது.
பீகார் மாநிலத்தில் அண்மையில் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்ததால், மத்திய இந்தியாவில் ஒரு விமான நிலையக் கட்டமைப்பு சேதமடைந்தது.
மழைக்காலம் தொடங்கியவுடன், இப்போது பல நகரங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கமாகிவிட்டது.
அயோத்தியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மோடியால் திறந்துவைக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவிலின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டு, புதிதாகக் கட்டப்பட்ட சாலைகளில் வெள்ளம் புகுந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“44.4 டிரில்லியன் ரூபாய் (S$722 பில்லியன்) மதிப்புள்ள புதிய உள்கட்டமைப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். இந்த எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் கட்டப்பட்ட அனைத்து திட்டங்களின் மதிப்புக்குச் சமமாகும்,” என்று புளூம்பெர்க் எக்கனாமிக்ஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வெற்றி பெற்றபோது, உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குவதுதான் தனது முக்கியத் திட்டம் என்று வாக்காளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த பத்தாண்டுகளில், 80 புதிய விமான நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ரயில்வே, மற்றும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு விரிவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டதாக அவரது அரசாங்கம் கூறுகிறது.
டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் மூத்த ஆய்வாளர் நிரஞ்சன் சாஹூ கூறுகையில், “ஜூன் 28ஆம் தேதி முனையம்1ல் ஏற்பட்ட பேரழிவு இந்தியாவின் உள்கட்டமைப்பின் தரம் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.
“இது ஒரு உலகளாவிய சக்தியாக இருக்க விரும்பும் நாட்டை மிகவும் மோசமான நிலையில் வைக்கிறது,” என்று தெரிவித்தார். பல திட்டங்களை “தேர்தல் வித்தை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

