திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை அடுத்து சுகாதார ஊழியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அதையடுத்து அங்கு வைரஸ் காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றன.
ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பருவ கால நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் மருத்துவமனைகளும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் 12 வயதுச் சிறுவன், அமோபிக் என்னும் புதிய வகை மோசமான மூளைத் தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளான். மாசடைந்த நீரில் அந்தக் கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் சிறுவனுக்கு கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் முதன்முதலாக கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி, இதேபோன்ற மூளைத்தொற்றுக் கிருமி பாதிப்புக்கு ஆளானார். சிகிச்சை பலனின்றி அவர் மே 21ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கடுத்து கண்ணூரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி மூளைத் தொற்றுக் கிருமி பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தார்.