கான்பூர்: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசித்து வரும் ராஜகுமாரி என்ற பெண், காணாமல் போன தன் அண்ணனை 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடைந்த பல்லை வைத்துக் கண்டுபிடித்துள்ளார்.
அண்ணன்-தங்கையைச் சேர்த்துவைத்த பெருமையை இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்ட குறுங்காணொளி பெற்றுள்ளது.
ராஜகுமாரி வழக்கம்போல் இன்ஸ்டகிராமில் பதிவிடப்பட்டுள்ள குறுங்காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒருவரின் முகம் மட்டும் பழக்கப்பட்ட முகமாகத் தெரிந்துள்ளது. இதனால், சற்று உற்றுக் கவனித்த அவருக்கு அது காணாமல்போன தன் அண்ணன்தான் என்பது உறுதியானது.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை தேடுவதற்காகச் சென்ற ராஜகுமாரியின் அண்ணன் பால் கோவிந்த், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், இன்ஸ்டகிராம் குறுங்காணொளி மூலம் தனது அண்ணனின் உடைந்த பல்லைப் பார்த்துக் கண்டுபிடித்துள்ளார். சின்ன வயதில் கோவிந்தின் பல் ஒன்று உடைந்து போனதாகவும் கூறுகிறார் ராஜகுமாரி.
அண்ணன் கிடைத்த மகிழ்ச்சியில், ராஜகுமாரி தன் சகோதரனைக் கைப்பேசியில் அழைத்துப் பேச, மனம் நெகிழ்ந்த கோவிந்த் தங்களது சொந்த கிராமத்திற்கு வந்து தங்கையைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார்.