ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவச் சிலையை அடையாளம் தெரியாத சில சந்தேகப் பேர்வழிகள் சனிக்கிழமை தீவைத்து எரித்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அட்டேபள்ளி கிராமத்தில் உள்ள சிலையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர் என்று ரெபள்ளே துணைக் காவல் கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.
“குற்றவாளிகள் தெலுங்கு தேசம் கட்சியின் கொடிமரத்தைச் சேதப்படுத்தியது மட்டுமின்றி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உருவபொம்மையை எரித்துள்ளனர்.
“சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்,” என முரளி கிருஷ்ணா கூறினார்.
ஒய்எஸ்ஆர் என்றும் காங்கிரஸ் பிரமுகர் என்றும் அழைக்கப்படும் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி, 2004 முதல் 2009 வரை பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராகப் பணியாற்றியவர்.
செப்டம்பர் 2, 2009 அன்று கர்னூலில் இருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ள நல்லமல்லா வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்தார். அவர் இறந்த பிறகும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்.

