டெல்லி பருவமழைக்கு 11 பேர் உயிரிழப்பு: மூன்று நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

2 mins read
0522068b-b7c7-4740-a9f4-91654209f170
டெல்லியில் கனமழை பெய்யும்போது சிறுவர்கள் இந்தியா கேட் அருகே விளையாடி மகிழ்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வெள்ளிக்கிழமை பெய்த வரலாறு காணாத மழையின் பாதிப்பில் இருந்து டெல்லி நகர மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு (ஜூலை 3ஆம் தேதி வரை) பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை பருவமழை தொடங்கியது முதல் இரண்டு நாள்களில் மட்டும் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் சிலரும் பள்ளங்களில் மூழ்கி இறந்தனர். பயணிகள் வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த பாதாளச் சாக்கடைகளில் சிக்கிக்கொண்டனர். வசந்த் விஹாரில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை மட்டும் நகரத்தில் 228.1 மி.மீ. மழை பதிவானது. இது 1936ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் ஒரேநாளில் பெய்த அதிக மழைப்பொழிவு என கணிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்டி விஞ்ஞானி சோமா சென் என்டிடிவி ஊடகத்திடம் பேசியபோது, “பருவமழை முன்னேறி வருவதாகவும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்,” என்றும் கூறினார்.

வெள்ளம் சூழ்ந்த பாதாளச் சாக்கடைகளில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன, அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்காக குடியிருப்பாளர்கள் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சிகள் தொலைக்காட்சித் திரைகளில் அதிகம் காண்பிக்கப்பட்டன.

நேற்றும் மூடப்பட்டிருந்த பிரகதி மைதான சுரங்கப்பாதை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

“நீர்த்தேக்கம் குறித்த புகார்களைக் கையாள அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப் படுகின்றன,” என்று குடிமைப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது மத்திய கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த டெல்லி மாநகராட்சி அதிகாரிகள், “மொத்தத்தில் 72 நிரந்தர பம்பிங் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன, கூடுதலாக 465 பல்வேறு திறன் கொண்ட பம்புகள் நீர்த்தேக்கத்தை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவில் மனிதவளமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்றனர்.

விமானங்கள் ரத்து

விமானக் கண்காணிப்புத் தளமான ஃபிளைட்அவேரின் தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுடெல்லியின் முக்கிய விமானநிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முனையத்திலிருந்து பெரும்பாலான விமானங்கள் மற்ற இரண்டிற்கும் திருப்பிவிடப்பட்டன என்று ஒரு விமான நிலைய அதிகாரி கூறினார்.

டெல்லி விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்றாகும்.

விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கவில்லை, ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தொலைபேசி அழைப்புக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
கனமழைடெல்லிஉயிரிழப்பு