புதுடெல்லி: இந்துக்களுக்கு பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கட்கிழமை (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. பழங்குடியினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா என்பதற்கான கருத்தியலே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது,” என்றார்.
அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டதாகவும், இன்னும் பலர் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. அனைத்து மதங்களும் பேசுகின்றன.
“இந்தியாவின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்துகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். நீங்கள் உண்மையான இந்து அல்ல.” என்று அவர் தெரிவித்தார்.
அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறுக்கிட்டு, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் தீவிரமான விஷயம் என்று கண்டனம் தெரிவித்தார். ராகுல் பேச்சுக்கு அமித்ஷாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து சிவபெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசிய போது, இப்படி கடவுள் புகைப்படங்களைக் காட்டுவது அரசியல் சாசன விதிமீறல் என சபாநாயகர் குறிப்பிட்டார். அவையில் சிவபெருமான் படத்தைக் காட்டக்கூடாதா? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, எந்தவொரு பதாகையையும் காட்டக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தல் வழங்கினார்.
ஆனாலும் சபாநாயகரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இஸ்லாமிய மதச் சின்னம், குருநானக் புகைப்படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, “சிவனின் கை முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக உள்ளது. உண்மையையும், அகிம்சையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது சிவனின் முத்திரை. எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. அகிம்சையை வலியுறுத்தவே சிவனின் இடப்புறம் திரிசூலம் உள்ளது. சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்,” என்று தெரிவித்தார்.

