பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: அமித்ஷா

2 mins read
14d551a9-bac6-4622-93a5-bc3709c92903
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் மூலம் பெண்களை குற்ற சம்பவங்களில் இருந்து காப்பாற்ற முடியும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பழங்கால ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 குற்றவியல் சட்டங்கள் திங்கட்கிழமை (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

தேசத் துரோகம் என்ற பிரிவு நீக்கப்பட்டு, பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தல், ஒற்றுமைக்கு எதிரான செயல் என சேர்க்கப்பட்டு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்டம் தொடர்பாக, விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். புதிய சட்டம் தொடர்பாக 6 லட்சத்திற்கு அதிகமான காவல்துறையினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தின்படி, மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் மின்னிலக்க முறையில் பெற்றுக்கொள்ள வழி செய்யும். மின்அஞ்சல் மூலம் ஆணை அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.

வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். காணொளி மூலம் வாக்குமூலம் பெற முடியும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வழிவகை கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைமுறைகளை இணைய வழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜிய எப்.ஐ.ஆர்., முறை மூலம் காவல்நிலைய எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

தவறான வாக்குறுதி கொடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனி குற்றம் வரையறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குடும்பத்தினர் முன்னிலையில் பெண் அதிகாரி வாக்குமூலம் பெறுவார்.

அரசியல் செய்யாமல் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். விரைந்து விசாரணை, நீதி, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்கான பாதுகாப்பை புதிய சட்டம் தரும் என்று அமித்ஷா கூறினார்.

குறிப்புச் சொற்கள்